தோழியை அபகரித்த கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு; சென்னையில் பரபரப்பு!
சென்னையில் தோழியை அபகரித்ததாக கூறி, மருத்துவ மாணவரை சுட்டுக் கொல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள டீ கடை ஒன்றில் நேற்று, 26 வயதான முதுகலை மருத்துவ மாணவர் ரோஹன் என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது, இருவர் அங்கு வந்து மருத்துவ மாணவர் ரோஹன் அருகே நின்றனர். அவர்களில் ஒருவன் திடீரென ரோஹனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். அதிர்ஷ்டவசமாக குண்டு அவர் மீது படாமல் குறி தவறியது. உடனடியாக அங்கு கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் கூட துவங்கிய நிலையில், இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவன் தப்பி ஓடிவிட்ட நிலையில் மற்றொருவன் பொதுமக்களிடம் பிடிபட்டான்.
இதையடுத்து அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரித்திக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய நபர் அமித் குமார் என தெரிய வந்துள்ளது. அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இதற்கிடையே ரித்திக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமித் குமாரின் தோழியான முதுகலை மருத்துவ கல்லூரி மாணவி திடீரென அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். ரேஹன் தான் இதற்கு காரணம் என நினைத்த அமித்குமார், ரித்திக்குமார் உதவியுடன் ரோஹனை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த முயற்சியை செயல்படுத்தியபோது குறிதவறியதில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய ரித்திக்குமாரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.