தென்னாப்பிரிக்காவில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து : 45 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்கு வழிபாட்டாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் உள்ள பாலத்தில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் 8 வயது குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாணமான லிம்போபோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிம்போபோ மாகாண அரசாங்கம், பேருந்து ம்மாமட்லகலா பாலத்திலிருந்து விலகி 50 மீட்டர் (164 அடி) பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்ததாகக் கூறியது.
தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.