நைஜீரியாவில் மீண்டும் டேங்கர் லொரி வெடித்துச் சிதறியதில் 86 பேர் பலி
நைஜீரியாவில் சரக்குகளைக் கொண்டு செல்ல ரயில் பாதைகள் இல்லாததால் பெரும்பாலும் சாலைகளே பயன்படுத்தப்படுகின்றன. சாலைகள் மோசமாக உள்ளதால் விபத்துக்கள் என்பது தொடர்கதையாக உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லொரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது டேங்கர் வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர்.
தற்போது, மீண்டும் நைஜீரியாவின் வடக்கில் அமைந்துள்ள குராரா என்ற பகுதியில் சென்ற டேங்கர் லொரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், டேங்கர் லொரியிலிருந்த பெட்ரோல் முழுவதும் வெளியே கசிந்து சாலையில் ஓடி உள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், முண்டியடித்தபடி ஓடிவந்து, பெட்ரோலை பாத்திரங்களில் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளனர்.
அப்போது திடீரென டேங்கர் லொரி வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த மக்கள் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிபர் போலா டினுபு ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோல் விலை 400 சதவீதம் அதிகரித்துள்ளதால் மக்கள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரை பறிகொடுக்கும் சூழல் தொடர்கிறது.