அசாமில் பயங்கரம்: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி
அசாம் மாநிலம் ஹொஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று அதிகாலை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயில், யானைகள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 8 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் இயந்திரம் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என இரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 2.17 மணியளவில் நடந்த இந்த விபத்தால், குறித்த மார்க்கத்திலான இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல இரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன





