விண்வெளிக்குச் சென்ற 4 எலிகள் பூமிக்குத் திரும்பின – உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
விண்வெளி ஆய்வுக்காகச் சென்ற சீன விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்ட 4 எலிகள் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளன.
பூமிக்குத் திரும்பப் பயன்படுத்தப்பட்ட விண்கலத்துக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எலிகள் விண்வெளியில் எலிகள் தங்க நேரிட்டது.
இந்த எலிகள் பூமிக்குத் திரும்பிய உடனேயே, அவற்றின் நடத்தை மற்றும் உடலியல் ஆய்வுகளுக்காக ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விண்வெளியில் இருந்தபோது எலிகள் குறைவான உணவை உட்கொண்டுள்ளன. ஆனால் அதிகமாகத் தண்ணீர் அருந்தியுள்ளன. இது தொடர்பான முதற்கட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்ததாகச் சீன மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
எடைக்குறைவு மற்றும் குறுகிய விண்வெளிகள் சிறு பாலூட்டிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விண்வெளியில் இந்த எலிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் கூறினார். குறைவான புவியீர்ப்புச் சூழலுக்கும் ஏற்றபடி அவை மிகக் குறுகிய காலத்தில் மாறிக் கொண்டதாகவும் ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த எலிகள் பூமிக்குத் திரும்பவிருந்த Shenzhou-20 விண்கலத்தின் சன்னலில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதன் காரணமாகவே அவற்றின் திரும்புதல் தாமதம் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.





