39 பேர் உயிரிழப்பு ஒரு திட்டமிட்ட சதி – நீதிபதியிடம் தவெக அதிரடி மனு
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 குழந்தைகள், 17 பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டனர்.
திட்டமிட்ட சதி என்று நீதிபதியிடம் தவெக மனு அளித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.
தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அறிவழகன்,
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். விஜய் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை முடிவு செய்யப்படும்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரின் இல்லத்தில் சந்தித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர்.






