இலங்கையில் 27 ஆயிரம் கோடி வரி வசூலிக்கத் தவறப்பட்டுள்ளது
தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் 27,000 கோடி ரூபா வரித் தொகையை வசூலிக்கத் தவறியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதேவேளை, வரி செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் சரியான தகவல்கள் இல்லை எனவும் குழு வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் இடம்பெற்றுவரும் பாரிய பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளைப் பெறுவதற்கு முறையான முறைமை இல்லாதது குறித்தும் குழு கலந்துரையாடியது.
எனவே, இந்தப் பணத்தைச் சேகரிப்பதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆதரவை அந்தக் குழுவின் ஊடாக வழங்குவதாகவும் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வரி அறவீடு, புதிய வரிக் கோப்புகளை ஆரம்பித்தல், திணைக்களத்தில் உள்ள ஊழியர் வெற்றிடங்கள், பிரதேச செயலகங்களில் வரி உத்தியோகத்தர்கள், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் றமீஸ் முறைமை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.