எத்தியோப்பியாவில் ட்ரோன் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு; அவசர நிலை அறிவித்த அரசு!
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் ஃபானோ எனப்படும் அம்ஹாரா போராளிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தும், தாக்குதல் நடத்தியும் வருவதாக ராணுவம் குற்றம்சாட்டுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக போராளி குழுவுக்கும், ராணுவத்துக்கும் மத்தியில் தாக்குதல் தொடர்கிறது. இந்த நிலையில், எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலத்தின் ஃபினோட் செலாத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ஃபினோட் செலாம் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், “100-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் பலர் இறந்துகிடந்ததாகத் தகவல் கிடைத்தது. ஆனால் அது பற்றிய சரியான எண்ணிக்கை எங்களிடம் இல்லை. இங்கு சிகிச்சைக்காக வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் தற்போது 26.
ஃபினோட் செலாமில் சாலைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள் காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உட்பட உயிரைக் காப்பாற்றுவதற்கான அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.
எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஃபினோட் செலாம் மற்றும் அம்ஹாரா பிராந்தியத்திலுள்ள இரண்டு இடங்களான புரி, டெப்ரே பிர்ஹான் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அம்ஹாரா பிராந்தியத்தின் தலைநகரான பஹிர் டாரின் பல பகுதிகளில் பொதுமக்கள் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அந்தப் பகுதிகளில் விரைவில் இயல்புநிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
எத்தியோப்பிய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டாடேல், ஆல்ஃபா மீடியா என்ற செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியர் பெக்கலு அலம்ரூ உள்ளிட்ட 23 நபர்களைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அம்ஹாராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.