“திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இறங்கியுள்ளார். அவர் இசையமைத்துப் பாடியுள்ள திருவாசகப் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது தனித்துவமான குரலில், மென்மையான இசையமைப்பில் இப்பாடலை உருவாக்கியுள்ளார். நவீன இசைக்கருவிகளுடன் பாரம்பரியமான பக்தி உணர்வு குறையாமல் இப்பாடல் செதுக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பாடல்களை விரும்புவோர் மட்டுமின்றி, இளைஞர்களையும் கவரும் வகையில் இதன் மெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. “ஜி.வி. பிரகாஷின் குரலில் ஒரு அமைதி இருக்கிறது”, “மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு மருந்தாக அமையும்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இளையராஜா அவர்கள் திருவாசகத்தை ‘சிம்பொனி’ வடிவில் வழங்கியிருந்த நிலையில், ஜி.வி. பிரகாஷின் இந்த முயற்சி ஒரு புதிய பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது





