மேற்கு அரபிக்கடலில் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய 30க்கும் மேற்பட்ட கப்பல்கள்
மேற்கு அரபிக்கடலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரபிக்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஹவுதி தீவிரவாதிகள் நடத்திய 25க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் மற்றும் கடற்கொள்ளையர் சம்பவங்களுக்கு இந்திய ராணுவத்தின் கப்பல்கள் பதிலடி கொடுத்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டு இறுதி மதிப்பாய்வில், பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கைகள் 400 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியதாகவும், இந்திய கடற்படை 230 க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை பிராந்தியத்திலிருந்து வெற்றிகரமாக அழைத்துச் சென்றதாகவும் கூறியது.
நவம்பர் 2024க்குள், மேற்கு அரபிக்கடல் பகுதியில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 லட்சம் மெட்ரிக் டன் பொருட்களைப் பாதுகாப்பதில் இந்தியா பங்களித்துள்ளது.
இந்திய கடற்படை அதன் பணி அடிப்படையிலான வரிசைப்படுத்துதலின் ஒரு பகுதியாக, ஓமன் வளைகுடா, ஏடன் வளைகுடா மற்றும் அரேபிய கடல் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியமான பகுதிகளில் தொடர்ச்சியான இருப்பை பராமரிக்கிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.