உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – ரோஹன ஹெட்டியாராச்சி!
உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,; தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.
வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வரையறைகளை அமைத்து, அதற்கமைய மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுகிறது.
அத்தோடு இதனுடன் இணைந்ததாகவே தேர்தல் மீளாய்வுக் குழு இருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் அவதான நிலையே இருக்கிறது.
என்றாலும், இந்த இரண்டு குழுக்களையும் இணைக்கும் முயற்சியிலேயே நாங்கள் இருக்கிறோம். தொகுதிகள் குறைவடைவது சாதகமாக இருந்தாலும், இதன் காரணமாக இந்த தேர்தல் கால வரையறை இல்லாமல் போகும் நிலை இருக்கிறது. இது பாரதூரமான விடயம்.
மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் தேர்தல் வரும் வரை இந்த தேர்தலை பிற்போடுவதற்குமே அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.