அவர்கள் என்னைக் கொன்றால் : இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ
தனக்கு ஏதாவது நேர்ந்தாலும், உங்களால் போராட முடியும் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவரான இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் லாகூரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் வீட்டு வளாகத்தில் ஆதரவாளர்களும் காவல்துறையினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்கிழமை மாலை வீடியோ செய்தியை வெளியிட்டார்.
தான் சிறையில் அடைக்கப்பட்டாலும், பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆளும் கட்சிக்கு சவால் விடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். என்னை கைது செய்ய பொலிசார் வந்துள்ளனர்.
உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போராட வேண்டும், நீங்கள் தெருவில் இறங்க வேண்டும், கடவுள் இம்ரான் கானுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார், நான் உங்களுக்காக போரில் போராடுகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் போராடினேன், தொடர்ந்தும் அதை செய்வேன். ஆனால் எனக்கு ஏதாவது நேர்ந்தால், அவர்கள் என்னை சிறையில் அடைத்தால் அல்லது என்னைக் கொன்றால் இம்ரான் கான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
ஒரு மனிதனின் இந்த அடிமைத்தனத்தையும் இந்த ஆட்சியையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கான் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.