வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்
கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழைநீர் தேங்கியதால் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வீதிகள் சேரும் சகதியுமாக மாறியது.
வீடுகளில் மழைநீர் தேங்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்ப பகுதி மக்கள் கூறுகையில், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சிரமத்திற்கு உள்ளாவதாகவும்,
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் குற்றம் சாட்டினர். இந்த பிரச்சனைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் போராட்டம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், வட்டாட்சியர் சுகுணா, கருமத்தம்பட்டி சரக டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியல் காரணமாக ரயில்வே பீட்டர் சாலை மற்றும் திருச்சி சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.