ரஷ்யாவைத் திசைதிருப்ப அமெரிக்கா போட்ட திட்டம்?
ரஷ்யாவைத் திசைதிருப்பும் நோக்கில் பல ரகசிய அமெரிக்க ஆவணங்கள் கசியவிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய வெளியுறவுத் துணையமைச்சர் செர்கே ரியாப்கோவ் இதனை கூறியுள்ளார்.
ஆவணங்கள் போலியானவையா உண்மையானவையா, வேண்டுமென்றே கசியப்பட்டனவா என்ற கேள்விகள் எழுவதால் அவற்றைக் காண்பதற்குச் சுவாரஸ்யமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனியப் போரில் அமெரிக்காவும் ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆவணங்களைக் கசியவிட்டு அவற்றைக் கொண்டு ரஷ்யாவைத் திசைதிருப்புவது வொஷிங்டன் கையாளும் போர் உத்தியாக இருக்கக்கூடும் என்று ரியாப்கோவ் குறிப்பிட்டார்.
கசிந்த ஆவணங்களில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் உக்ரேனின் போர்த் தந்திரம் குறித்த ரகசியத் தகவல்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறித்த ரகசிய மதிப்பீடு உள்ளிட்டவை இருந்தன.
ஆவணங்கள் கசிந்ததுபற்றி அமெரிக்க நீதித்துறை, குற்றவியல் விசாரணை நடத்துகிறது.