முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள் : அனுரகுமார திஸாநாயக்க சவால்!
உயர்நீதிமன்றத்தின் இடையுத்தரவால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தை உயர்நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது, முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் சவால் விடுத்தார்.
தேர்தல் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அல்ல அரசியலமைப்புக்கு அமைய நடத்த வேண்டும். தேர்தலை மக்கள் கோரவில்லை என ஆளும் தரப்பினரால் மக்கள் மத்தியில் சென்று குறிப்பிட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்கள் தேர்தலை கேட்கவில்லை என்றால்,மக்கள் தேர்தல் கேட்கும் அனைத்து தருணத்திலும் தேர்தலை நடத்த வேண்டும், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால் தான் அரசியலமைப்பிற்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.