பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதிபதி தெரிவிப்பு
பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கூ இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட Aukus உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின் எதிர்காலப் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும், இந்து-பசிபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு சமுத்திரங்களைக் கொண்டிருப்பதாகவும், இந்து சமுத்திரத்தில் கப்பல்கள் சுதந்திரமாக பயணித்தல் மற்றும் கடலுக்கடியில் கேபிள்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கு எமது நாடு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதனால் ஆசிய பசுபிக் வலயத்தில் குறிப்பாக தாய்வான் பிரச்சினை இந்து சமுத்திரதிற்குள் கசியாமல் பார்த்துக் கொள்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.