பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியெற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காலையில் இருந்து அன்னவாசல், கீரனூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வருகிறது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து அம்மனை மனம் உருக வழிபட்டு வருகின்றனர்.
இந்த தேரோட்ட திரு விழாவிற்காக உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டும் இன்றி, திருச்சி,சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவின் பேரில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.