சிக்னல் பயனர்களுக்கு ஆபத்து! ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்குப் புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியைப் பயன்படுத்தும் முக்கிய நபர்களைக் குறிவைத்து உலகளாவிய ரீதியில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக டச்சு (Dutch) உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அரச அதிகாரிகள், இராணுவப் படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை இலக்கு வைத்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மோசடி எப்படி நடக்கும் (Phishing Attack) விதம்
இது சிக்னல் செயலியின் மென்பொருள் குறைபாடு அல்ல. மாறாக, ஹேக்கர்கள் தங்களை சிக்னல் நிறுவனத்தின் “உதவிப் பணியாளர்கள்” (Support Staff) போல அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர், கணக்கைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி பயனர்களிடம் இருந்து:
மொபைலுக்கு வரும் SMS குறியீடு (SMS Code), சிக்னல் பாதுகாப்பு (PIN ) இலக்கம்
ஆகியவற்றை ஏமாற்றிப் பெற்று, கணக்குகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து சிக்னல் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளத்தில் விளக்கமளித்துள்ளது. “எமது பாதுகாப்பு கட்டமைப்பு வலுவாகவே உள்ளது. ஆனால், பயனர்களை ஏமாற்றித் தகவல்களைப் பெறும் ‘பிஷிங்’ (Phishing Attack) முறையை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர். எக்காரணம் கொண்டும் உங்கள் ரகசியக் குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.
பயனர்களுக்கான 3 முக்கிய பாதுகாப்பு அறிவுரைகள்:
சிக்னல் நிறுவனம் ஒருபோதும் உங்கள் SMS கோட் அல்லது PIN இலக்கத்தைக் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனுமதியின்றி வேறு கணினிகள் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை Settings-(Linked Devices)இல் உடனுக்குடன் சரிபார்க்கவும்.
உங்களது சிக்னல் செயலியில் ‘Registration Lock’ வசதியை ஆன் (ON) செய்து வைப்பதன் மூலம் உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும்.
இந்தச் சைபர் தாக்குதல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதால், சிக்னல் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





