காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி திணைக்களத்தின் முன்னறிவிப்பு இன்றியமையாதது, எனவே உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி போன்ற நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தில் இன்று (மார்ச் 23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘தலைமுறைகளை தாண்டிய வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம் என்பது 2023 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை தினத்தின் நினைவு விழாவின் கருப்பொருளாக அமைந்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யபட்ட மேற்படி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும் உரையாற்றிய அவர், மேம்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதுப்பித்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இது விவசாயம், மின்சாரம், மீன்பிடி, சுற்றுலா போன்ற பிற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் அதன் பங்களிப்புகள் நிதி அடிப்படையில் அளவிட முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.
மாறிவரும் காலநிலை மற்றும் புவியியல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேகமாக வளர்ந்து வரும் உயரமான மற்றும் உயர் குடியிருக்கும் கட்டிடங்களின் தரப்படுத்தல் மற்றும் கடுமையான கட்டிடத் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இதன்போது எடுத்துரைத்தார்.
வளிமண்டலவியல் திணைக்களம் அதன் பாரம்பரியங்களை பேணுவதன் மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் திறம்பட உருவாகியுள்ளது.
எந்த அனர்த்தங்களையும் அல்லது அவசரகால சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளனர்.
புவியியல் சீர்குலைவுகளை முன்னறிவிப்பது கடினமாக இருந்தாலும், அத்தகைய அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என இந்த நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க அவர்கள் வரவேற்றார்.
இந்த நினைவு தினத்தின் கருப்பொருள் உரையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் கே.டி.சுஜீவ அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகங்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி உலக வளிமண்டலவியல் நிறுவனம் நிறுவப்பட்ட உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி உலக வளிமண்டலவியல் தினம் கொண்டாடப்படுகிறது.