ஈராக், சிரியாவின் ஐ.எஸ் தலைவர் தலைவர் கொலை

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் ஸ்டேட் தலைவர் அபு கதீஜா எனும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிஃபாய் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இருள் மற்றும் பயங்கரவாதத்தின் சக்திகளுக்கு எதிராக ஈராக்கியர்கள் தங்கள் அற்புதமான வெற்றிகளைத் தொடர்கின்றனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் “துணை கலீஃபா”-வும், உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவருமான அபு கதீஜா என்றழைக்கப்படும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிஃபாய் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ஈராக்கில் தப்பியோடிய ஐஎஸ் தலைவர் இன்று கொல்லப்பட்டார். ஈராக் அரசாங்கம் மற்றும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நமது துணிச்சலான போர்வீரர்களால் அவர் இடைவிடாமல் வேட்டையாடப்பட்டார். வலிமையால் அமைதி ஏற்பட்டுள்ளது!” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர், வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடந்தது, எனினும் வெள்ளிக்கிழமை அன்றே அல்-ரிஃபாயின் மரணம் உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
சிரியாவின் இடைக்கால வெளியுறவு அமைச்சர் அசாத் ஹசன் அல்-ஷிபானி ஈராக்கிற்கு முதல் முறையாக பயணம் செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளன.