அந்தரத்தில் சிக்கிய துப்புரவு பணியாளர்கள்; போராடி மீட்ட தீயணைப்பு படையினர்!(வீடியோ)
கனடா நாட்டின் வான்கூவரிலுள்ள கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளைத் துடைத்துக் கொண்டிருந்த போது, அந்தரத்தில் சிக்கிய ஊழியர்களைப் போராடி மீட்ட தீயணைப்பு படை வீரர்களைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கனடா நாட்டின் வான்கூவர் நகரின் ஜார்ஜியா மற்றும் ஹோமர் தெருவிலுள்ள புதிய கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிச் சுவர்களை இரண்டு தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர்.அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மேலே சென்ற லிப்ட் சரியாக வேலை செய்யாமல் அந்தரத்தில் நின்றிருக்கிறது.இதனால் ஊழியர்கள் இருவரும் உயரமான கட்டிடத்தின் அந்தரத்தில் சிக்கியிருக்கின்றனர். உடனே பொதுமக்கள் அவர்களை மீட்க தீயணைப்பு படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் உச்சியிலிருந்து ரோப் மூலமாகத் தொழிலாளர்கள் சிக்கியிருந்த நடைமேடைக்கு இறங்கி வந்து தொழிலாளர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
“கட்டிடம் மிகவும் சிக்கலான முறையில் கட்டப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறம் மிகவும் தட்டையாக இருப்பதால் கீழே இறங்குவது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் குழுவின் உயர் பயிற்சி பெற்ற குழுவினர் கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று மிகவும் சிரமப்பட்டு அவர்களை மீட்க வேண்டியிருந்தது.” எனத் தீயணைப்பு படைவீரர் கூறியுள்ளார்.ஒரு மணி நேரத்தில் ஊழியர்களைத் தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்களின் இத்தீரம் மிக்கச் செயலை வான்கூவர் நகரின் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.