யாழ் நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிற்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த பொதுமகன் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அன்றையதினமே மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது.
நேற்றையதினம் மீண்டும் யாழ்நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் குறித்த உணவகம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமலே காணப்பட்டது. அத்துடன் உரிய அனுமதி பெறப்படாமல் இயங்கிய மற்றோர் உணவகமும் பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ந்து 02 உணவகங்களிற்கும் எதிராக இன்று 27.10.2022 மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளினை விசாரித்த நீதவான் இரண்டு உணவகங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த இரு உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டது