உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு அறுவை சிகிச்சை
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.
முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது.
இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும்.
எனவே ஜூலை 1ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.