வெனிசுலாவில் (Venezuela) தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் – 14 பேர் பலி!

வெனிசுலாவின் (Venezuela) எல் கல்லோவில் (El Callao) சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கராகஸிலிருந்து (Caracas) தென்கிழக்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாட்ரோ எஸ்குவினாஸ் டி காரடல் (Cuatro Esquinas de Caratal) என்ற தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
உயிரிழந்த 14 பேரின் உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற சுரங்க தொழிலாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல் கல்லோ (El Callao) என்பது தங்கச் சுரங்கத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். அங்கு வாழும் 30,000 மக்கள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சுரங்க தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
இதேவேளை வெனிசுலா செம்பு, வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகச் சுரங்கங்களால் நிறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.