ட்ரம்பின் ஈரான்மீதான வர்த்தகப் போரால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுமா?
ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால Professor Udayanga Hemapala மேற்படி தகவலை வெளியிட்டார் என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
“ ஈரானிடம் இருந்து இலங்கை இனி எரிபொருளை வாங்காது. அந்நாட்டிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து இலங்கை விலகிக் கொண்டு விட்டது.
தற்போது சிங்கப்பூர், இந்தியா மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்தே, போட்டி கேள்விப்பத்திர நடைமுறைகள் மூலம், எரிபொருள் வாங்கப்படுகிறது.”எனவும் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் உலகளாவிய தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்க கூடும் என கருதப்படுகின்றது.
அதேவேளை, ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.





