மத்திய கிழக்கில் போர் சூழல் ஏற்படுமா? – சகாக்களுக்கு ஆயுத விற்பனையில் ஈடுபடும் அமெரிக்கா!
இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
காசாவில் பலவீனமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேலுக்கு 30 அப்பாச்சி (Apache) தாக்குதல் ஹெலிகாப்டர்களை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டு இலகுரக தந்திரோபாய வாகனங்களை 1.8 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது, மேலும் இஸ்ரேல் வலுவான மற்றும் தயாராக உள்ள தற்காப்பு திறனை வளர்த்து பராமரிக்க உதவுவது அமெரிக்க தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதை விட உதவியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 730 பேட்ரியாட் ஏவுகணைகளை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரானுடனான உறவுகள் பலவீனமடைந்து வருகின்ற இந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் தங்களுக்கு ஆதரவான நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.




