ட்ரம்ப் – கிம்மின் சந்திப்பு மீண்டும் நிகழுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆசிய பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனது ஆசிய பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கும் வட கொரிய தலைவருக்கும் மிகவும் நல்ல உறவு இருந்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
பதவியில் இருந்தபோது வடகொரியாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார். இருப்பினும் இந்த சந்திப்பு தோல்வியிலேயே முடிந்தது.
இதனைத் தொடர்ந்து வடகொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகள் பிளவுப்பட்ட நிலையிலேயே உள்ளன.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ட்ரம்ப் வருகை தரவுள்ளார். இதன்போது அவர் சீன ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும் ட்ரம்ப்பை சந்திக்க கிம் இணங்குவாரா என்பது கேள்விக்குறிதான்.
முன்னதாக ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது.
வடகொரியா இவ்வாறான பரிசோதனைகளை முன்னெடுப்பது வழக்கமான விடயம் என்றாலும், தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டிற்கு ட்ரம்ப் வருகை தரவுள்ள சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிசோனையானது ஓர் எச்சரிக்கை செய்தியை தருவதாக பார்க்கப்படுகிறது.





