ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் “லியோ”… ரஜினியின் 2.0 சாதனையை முறியடிக்குமா?
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், அதற்கான முன்பதிவும் உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெளிநாடுகளில் கடந்த மாதமே தொடங்கப்பட்ட லியோ படத்திற்கான முன்பதிவு, இந்தியாவில் கடந்த வாரம் தான் தொடங்கியது.
டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனே பெரும்பாலான இடங்களில் லியோ பட டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் லியோ பட டிக்கெட்டுக்கு செம்ம டிமாண்ட் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
லியோ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு சென்று ரசிகர்கள் அதிகாலை காட்சியை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லியோ படத்தின் முன்பதிவு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அதன்மூலம் கிடைத்துள்ள வசூல் நிலவரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி லியோ படம் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். அதில் தமிழ்நாட்டில் 6.25 கோடி, கேரளாவில் 7 கோடி, கர்நாடகாவில் 6.25 கோடி, இதர மாநிலங்களில் 1 கோடி என இந்தியாவில் மட்டும் ரூ.20.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் 6 வாரத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு நடைபெற்று வருவதால் அங்கு ரூ.39.5 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் முதல் நாளில் லியோ படத்தின் உலகளாவிய வசூல் நிச்சயம் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ரஜினியின் 2.0 திரைப்படம் தக்க வைத்துள்ள நிலையில், அதனை லியோ முறியடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.