கார்க் தீவை கைப்பற்றுமா அமெரிக்கா?
ஈரானிய நிலப்பரப்பில் இருந்து 15 கடல் மைல்கள் (சுமார் 28 கிமீ தொலைவில்) அமைந்துள்ள கார்க் தீவு (Kharg Island), ஈரான் அரசின் மிக முக்கிய பொருளாதார முதுகெலும்பு.
ஈரான், அங்கிருந்து 90 சதவீத கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 950 மில்லியன் பீப்பாய்களை ஈரான் ஏற்றுமதி செய்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி கூறுகிறது.
கார்க் தீவை ஹார்மூஸ் நீரிணையுடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இதற்காக படையினரையும் கனரக ஆயுதங்களையும் அமெரிக்கா நகர்த்துகிறது.
ட்ரம்பின் எச்சரிக்கைகளை மீறி ஈரானியப் படைகள் அங்கு தொடர்ந்து செயல்படுவதாக, ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தை (Fars news agency) மேற்கோள்காட்டி, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதல்களில் கார்க் தீவவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு சேதமடையவில்லை என்றும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
போரின் மத்தியிலும் சார்புடைய எண்யெக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவே ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூடாமல் இருப்பதாக ஷாங்காய் மத்திய கிழக்கு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியரான லியு சாங்மின், குளோபல் ரைம்ஸ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ இலக்குகளிலிருந்து பொதுமக்கள் வாழும் பகுதி வரை மோதல் விரிவடையும் பட்சத்தில், அது மேலும் பகைமை தீவிரப்படுத்தப்படுத்தும் என்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு பரந்த அச்சுறுத்தலாக அமையும் எனவும் பேராசிரியர் லியு சாங்மின் கூறுகிறார்.
கார்க் தீவைக் கைப்பற்றும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சிக்கும் பெரும் எண்ணிக்கையிலான தரைப்படைகள் தேவைப்படும் என சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹார்மூஸ் நீரிணை வழியாக சீன கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி வழங்கியது.
இதனால் அனுமதி வழங்கப்படாத சில கப்பல்கள் தங்கள் டிரான்ஸ்பொண்டர்களை (Transponders) பயன்படுத்தி, சீனர்கள் என அடையாளப்படுத்தி, தமது கப்பல்களை நகர்த்தியதாக, பிரித்தானியாவை மையப்படுத்தி புவிசார் அரசியல் ஆய்வு நிறுவனமான சாதம் ஹவுஸ் (chathamhouse) இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக லைபீரியன் கொடியுடன் கூடிய சினோஓசியன் (SinoOcean) எனப்படும் எண்ணெய்க் கப்பல், ஹார்முஸ் நீரிணையை கடப்பதற்கான சமிக்ஞையை ‘சீனா உரிமையாளர் – அனைவரும் பணியாளர்கள்’ (CHINA OWNER_ALL CREW) என அறிவித்தாக சாதம் ஹவுஸ் செய்தி ஆய்வு கூறுகிறது.
ஆனால், இந்திய எண்ணெய்க் கப்பல் எப்படிக் கடந்தது என்பது தொடர்பாக சாதம் ஹவுஸ் எந்தவொரு செய்திக் கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால், இந்திய ஊடகங்கள் அது ஏதோ, புது டில்லியின் மூலோபாயம் என மார்தட்டுகின்றன.
அதேவேளை, இந்த நீரிணை பகுதி போர் பதற்றம் நிடிப்பதால், மொசாம்பிக் கால்வாய் (Mozambique Channel) கேப் ஆஃப் குட் ஹோப் (Cape of Good Hope) வழியாக போக்குவரத்துக்கான முயற்சி எடுக்கப்படுகிறது.
ஏனெனில் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட தூரம் செல்ல அதிக நேரம் எடுக்கும் என்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும்.
ஆகவே நிச்சயமற்ற தன்மை தொடருவதால் பல கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள துறைமுகங்களில் தங்கியிருக்கும் நிலைமை வரலாம் எனவும் சாதாம் ஹவுஸ் எடுத்துக்காட்டுகிறது.
அதேநேரம் சோமாலிய நாட்டில் செயற்படும் கடற்கொள்ளையர்கள் வரலாற்று ரீதியாக மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பல்களைத் தாக்கி வருவதையும் சாதம் ஹவுஸ் செய்தி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-





