கனடா ஏன் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறக்கூடாது? – ட்ரம்ப் கேள்வி!
கனடா ஏன் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா, கனடாவிற்கு வழங்கும் சலுகைகளை புரிந்துவைத்திருந்தார் எனவும், அதன் காரணமாக அவர் பதவி விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது.
நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறையச் சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், அதனாலேயே ராஜினாமா செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கு கனடா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியமைத்ததில் இருந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு அந்நாட்டு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து அந்நாடு மீது அதிகளவிலான வரி விதிப்புகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





