கனடா பிரதமர் சீனாவில் களமிறங்குவதன் பின்னணி என்ன?
கனடா பிரதமர் மார்க் கார்னியின் Mark Carney சீன விஜயமானது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல அமெரிக்காவும் தனது கழுகுப் பார்வையை செலுத்தியுள்ளது.
சீனாவுடனான உறவை கட்டியெழுப்பும் நோக்கிலும், அமெரிக்காவுக்கு வெளியே சந்தை வாய்ப்பை பெறுவதற்குரிய சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதற்காகவுமே கனடா பிரதமர் பீஜிங் பறக்கின்றார்.
கனடா தமது நாட்டின் மாநிலமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அத்துடன், வர்த்தகப் போரையும் முடுக்கிவிட்டுள்ளார்.
எனவே, பொருளாதார ரீதியில் அமெரிக்காவை மட்டும் நம்பி இருந்தால் நெருக்கடி நிலை ஏற்படுமென கனடா கருதுகின்றது. எனவேதான் அமெரிக்காவுக்கு வெளியில் ஏற்றுமதியை அந்நாடு இலக்கு வைத்து நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றது.
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கனடா பிரதமர் ஒருவர் சீனா செல்லும் சந்தர்ப்பம் இதுவாகும். ஜனவரி 14 முதல் 17 வரை அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
“ இது வரலாற்று முக்கியத்துவமிக்க தருணமாகும். கனடாவின் அமெரிக்கா அல்லாத ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதற்குரிய திட்டத்தின் ஓர் அங்கமாகும்.” என கனடா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயம் மற்றும் சர்வதேச பாதுகாப்புடன் வர்த்தகமும் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கார்னி சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரை ஜனவரி 15 ஆம் திகதி சந்திக்கின்றார்.
நாளை மறுதினம் சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.





