கூகுளின் ‘I’m not a robot’ எதற்காக?
பல சமயங்களில் கூகுளின் உள்ளே சில வலைதளங்களுக்குள் நாம் நுழையும்போது, I’m not a robot என்பதை கிளிக் செய்யுமாறு கேட்டிருக்கும். இதையும் நாம் கிளிக் செய்துவிட்டு அந்த வலைதளத்திற்குள் நுழையும் வேலையை நாம் பார்ப்போம். ஆனால் இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
தற்போது உலகமெங்கும் கூகுளைத் தான் அதிகம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கூகுளில் நாம் ஏதாவது தேடும் போதோ, அல்லது ஏதாவது வலைதளத்துக்குள் நுழையும் போதோ I’m not a robot என்பதை உறுதிப்படுத்துமாறு ஒரு திரை தோன்றும். இது சில சமயம் வெறும் டிக் மட்டும் செய்யச் சொல்லும். சில நேரங்களில் பல புகைப்படங்களைக் காட்டி அதில் உள்ள குறிப்பிட்ட பொருளைக் கண்டுபிடிக்கும்படி கேட்கும். இவ்வாறு நீங்கள் ரோபோ இல்லை என்பதை உறுதி செய்தால் மட்டுமே இணையதளத்துக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.
இதை ஏன் கூகுள் செய்கிறது என்றால், திரையில் தோன்றும் I’m not a robot என்பதை துல்லியமாக ஒரு ரோபோவாலும் கிளிக் செய்ய முடியும். ஆனால் இதில் கூகுள் கவனிப்பது நாம் கிளிக் செய்கிறோமா இல்லையா என்பதை அல்ல. எதுபோன்று கர்சரை நாம் நகர்த்துகிறோம் என்பதைத்தான். ஒரு ரோபோவால் கர்சரை மிகத் துல்லியமாக நகர்த்த முடியும். ஆனால் மனிதர்களால் அப்படி செய்ய முடியாது. இதன் மூலமாகவே நாம் மனிதரா அல்லது ரோபோவா என்பதை கூகுள் தெரிந்துகொள்ளும்.
இது இணையதளத்தின் ஒரு குறிப்பிட்ட அல்காரிதம் மூலமாக இயக்கப்படுகிறது. ரேண்டமாக சில நேரங்களில் இப்படி கேட்கும். உங்கள் சாதனத்தில் பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யவே இப்படி செய்யப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கி, நம்முடைய கடந்த கால தேடல்கள் மூலம், தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் கூகுள் இந்த முறையைப் பின்பற்றுகிறது.