நீலகிரியில் விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக சக நண்பர்கள் செய்த காரியம்…!
நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவாக சிறிய அளவிலான சிலையை தாய் மற்றும் சகோதரனுக்கு கொடுத்து, நண்பர்கள் ஆஞ்சலி செலுத்திய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த எல்லநள்ளி அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக். இவர் கேத்தியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் அதே பகுதியில் உள்ள கால்பந்தாட்ட குழுவில் விளையாடி வந்துள்ளார். இவரது மறைவு நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில் நண்பர்கள் இணைந்து ஒரு நிகழ்விற்கு திட்டமிட்டனர். இதன்படி எல்லநள்ளி பகுதியில் உள்ள ஏடிகே கால்பந்தாட்ட குழுவின் சார்பாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ரித்திக்கின் தாய் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோரை, நண்பர்கள் அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் ரித்திக்கின் தாய் மற்றும் சகோதரரை அழைத்து அவர்களுக்கு ஒரு அட்டை பெட்டியில் நினைவு பரிசை வழங்கினர்.
எதிர்பாராத ஜான், பெட்டியில் உள்ள பரிசை திறந்து பார்த்தார். அதில் தன்னுடைய சகோதரன் ரித்திக்கின் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டிருப்பதை கண்டு பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து, கண்ணீர்விட்டு அழுதார். தாயார் ரெஜினா மற்றும் ஜான் சிலையை கண்டு கண்கலங்கியது, கூடியிருந்த பார்வையாளர்கள் கண்ணீர் மல்க வைத்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.