இஸ்ரேல் உடனான போரில் பின்வாங்க மாட்டோம்; ஆயத்துல்லா அலி காமெனி சூளுரை
வட்டாரத்தில் உள்ள தம் நட்பு அமைப்புகளான ஹிஸ்புல்லாவும் ஹமாசும், இஸ்ரேலுடன் தொடர்ந்து போரிடும் என்று ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி சூளுரைத்துள்ளார்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் தம் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) உரையாற்றிய அவர், அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தற்காத்துப் பேசினார்.
இஸ்ரேல் மீது ஈரான் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியதற்குப் பிறகும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளின் சண்டை முழு அளவிலான போர் என்ற நிலையை எட்டிய பிறகும் ஆயத்துல்லா பேசியிருப்பது இதுவே முதன்முறை.
ஆயிரக்கணக்கானோரிடம் அரபு மொழியில் பேசிய அவர், “வீரமரணம் அடைந்தோரால் இந்த வட்டாரத்தில் உள்ள எதிர்ப்பு பின்வாங்காது. மாறாக, அது நிச்சயம் வெற்றிபெறும்,” என்று அவர் சூளுரைத்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பழிதீர்க்க இஸ்ரேல் வியூகம் அமைத்துவரும் வேளையில், ஆயத்துல்லா இவ்வாறு பேசியுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் இதர தளபதிகளும் கொல்லப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.
இந்நிலையில், ஹிஸ்புல்லாவைப் பாராட்டிய ஆயத்துல்லா, ஒட்டுமொத்த வட்டாரத்திற்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் அது முக்கியச் சேவை ஆற்றியதாகக் கூறினார்.
போர் பதற்றம் மோசமடைந்துள்ளதால், தங்கள் நாட்டை சூழ்ந்துள்ள வன்முறைக்கு விரைவில் முடிவு எட்டப்படாதோ என்ற அச்சம் லெபனான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.