இலங்கையில் பொருட்களின் விலைகள் குறையவில்லை என்பதும் எங்களுக்கு தெரியும் – பிரதமர்

நாடு வீழ்ந்திருக்கும் சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கும், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், வேலணை, நீர்வேலி மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
எல்லா விடயங்களும் இன்னும் சரியாக நடக்கவில்லை என்பதும், பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றார்.
அரசாங்கம் அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது எதிர்காலத்தில் மக்கள் அந்த பயன்களைப் பெறுவார்கள்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அரசாங்க சேவை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் அரசாங்கத்தைப் போலவே, மக்களின் அரசாங்க சேவை என்ற நிலை உருவாக வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டது. மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நாட்டில் மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.