இயர்போன், ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

இயர்போன், ஹெட்போன் போன்ற அதிக ஒலி கொடுக்கும் சாதனங்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால், கேட்புத்திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பொது ஆரோக்கிய இயக்குநர் அதுல் கோயல், அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக அதிக நேரம் இயர்போன், ஹெட்போன் அணிந்து பயன்படுத்துவதால், நம் காதுகளின் கேட்புத் திறன் குறைய ஆரம்பிக்கிறது.
முதலில், நுண்ணிய ஒலிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் கேட்புத்திறன் மந்தமடைகிறது. இதன் பாதிப்பு மெதுவாக உருவாவதால், பலரும் தங்களது கேட்புத்திறன் பாதிக்கப்பட்டுவிட்டதை உணரவே முடியாது.
இதைத் தவிர்ப்பதற்கு: ஒரு நாளில் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இயர்போன் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும்.
அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்பது, பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர்ரக, அதிநவீன இயர்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; கூடவே, காதுகளின் பாதிப்பும் அதிகரிக்கிறது. அதனால், முடிந்தவரைக்கும் இயர்போன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று பொது சுகாதாரத் துறை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை ஆக உள்ளது.