பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பலவேறு விதமான தேவைகளுக்காக தொடர்ந்து பயன்படுத்துகிறோம். அதிகல் நமது தண்ணீர் பாட்டில்களும் அடங்கும். பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம்.
உடல் நலத்திற்கு பெரும் கேடு
தினமும் நாம் தண்ணீர் குடிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நம் உடல் நலத்திற்கு பல வகைகளில் பெரும் கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்த பாட்டில்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இதய நோய் ஆபத்தை பெரிதும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் கூடியவை. பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வழியில் நம் உடலில் நுழைந்து, பெரிய அளவில் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பதை எடுத்துரைக்கும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு. அதன் மூலம் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகள் உடலிலும் ரத்தத்திலும் கலக்கின்றன ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற ரசாயனம்
பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பாலித்தீன் கவர்களை உருவாக்க பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆண்டிமனி மற்றும் பித்தலேட்டுகள் போன்றவற்றை வெளியிடுகின்றன. இந்நிலையில், இவை பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீருக்குள் கலந்து, நம் உடலை அடைகிறது.
இதய நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து
அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை அமைப்பு (US National Ocean Services) இது குறித்து கூறுகையில், மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மிமீ அளவை விட சிறிய பிளாஸ்டிக் துகள்கள். அவை நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உணவு, காற்று மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இவை நம் உடலில் நுழைகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலையிலும் அல்லது வெயிலில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் போதும், அதில் உள்ள பிளாஸ்டிக் சிதைந்து, மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களை தண்ணீரில் வெளியிடுகின்றன. இந்த துகள்கள் மிகவும் சிறியவை எனவே, அவை எளிதாக உடலில் நுழைந்து இதய நோய்களை ஏற்படுத்துகின்றன என்றார்
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் இதய ஆரோக்கியம்
பிளாஸ்டிக் துகள்கள் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை அமைப்பு ஆய்வு செய்தது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் செல்களில் சிக்கினால், அவை இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அடைப்புகள் வளரும் போது, அவை இரத்த ஓட்டத்தையும் தடுக்கலாம். இது மாரடைப்பு போன்ற தீவிர இதய நோய்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஏற்கனவே இதய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பல நோய்களின் ஆபத்து
பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதன் முடிவுகள் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன. மைக்ரோபிளாஸ்டிக் நீண்டகாலமாக உடலில் கலப்பதால், வீக்கம், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைதல் மற்றும் இரத்த நாளங்களில் தொடர்ச்சியான அடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். நீங்கள் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உங்களுக்கு இன்னும் ஆபத்தானது. காலப்போக்கில், இந்த அடைப்புகள் மிகவும் தீவிரமான இதய நோய்க்கு வழிவகுக்கும்.