இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சருமத்தில் சிவத்தல், வியர்வை கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவர் இந்திரா கஹாவிட்ட (Indira Kahavita) வலியுறுத்தியுள்ளார்.
டைனியா வெர்சிகலரால் (Tinea versicolor) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் கணிசமான அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, அக்குள் மற்றும் இடுப்பு உட்பட்ட இடங்களில் கடுமையாக அரிப்பு ஏற்பட்டால் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழியில் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது நோயை மோசமாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டைனியா வெர்சிகலர் (Tinea versicolor) என்பது தோலில் ஏற்படும் ஒரு பொதுவான, தொற்றாத பூஞ்சை தொற்று ஆகும். இது பொதுவாக மார்பு, முதுகு மற்றும் மேல் கைகளில் நிறமாற்றத் திட்டுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலை மலாசீசியா ஈஸ்டின் (Malassezia yeast) அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகிறது.





