கொழும்பில் நடந்த கொடூர கொலை – காரணம் வெளியானது
கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடிப்பதற்காக இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி கொழும்பு, வார்ட் பிளேஸில் உள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இனந்தெரியாத ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர்.
விசாரணையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உட்பட பல பொலிஸ் குழுக்கள் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
சிசிடிவி காட்சிகளின் ஊடாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட விசாரணை அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 மற்றும் 38 வயதுடைய கொனவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
விசாரணையில் அவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகி இருப்பதும், அதற்காக பணம் சம்பாதிப்பதற்காக கொள்ளையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
சந்தேகநபர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரையும் தவிர மற்றுமொரு நபருடன் சபுகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் கடந்த 23ஆம் திகதி காலை வார்ட் பிளேஸ் நோக்கி வந்ததாக தெரியவந்துள்ளது.
வழியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தொலைபேசியுடன் பார்த்த சந்தேக நபர்கள் அவரது கைத்தொலைபேசியை பறிக்க முயற்சித்துள்ளனர்.
சண்டையின் போது, ஒருவர் கூரிய ஆயுதத்தால் சாரதியின் மார்புப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை 4,000 ரூபாவுக்கு அடகு வைத்ததாகவும், அந்தப் பணத்தை பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் கொள்வனவு செய்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன், கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அவர்கள் வந்த முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளார்.