ட்ரம்ப் பதவியேற்றால் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அதிபர் ஜெலென்ஸ்கி
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஊடகமான Suspilne-க்கு அளித்த பேட்டியில், “டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும். இப்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் புதிய அணியின் கொள்கைகளே இதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயம் இது நடக்கும். ஏனெனில், இது அவர்களின் அணுகுமுறை, அவர்களின் குடிமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதி.” என தெரிவித்தார்.
‘அப்படியானால் போர் எப்போது முடிவுக்கு வரும்’ என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, “எப்பேது போர் முடிவுக்கு வரும் என்பது குறித்த சரியான தேதி எங்களுக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியதை சுட்டிக்காட்டி, அந்த உரையாடல் எவ்வாறு இருந்தது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, “ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் ஆக்கபூர்வமானதாக இருந்தது. எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரான எதையும் நான் கேட்கவில்லை” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் (பிப்ரவரி 2022) இருந்து, உக்ரைனுக்கு வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் உதவியை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். மேலும், தான் அதிபரானால் அடுத்த 24 மணி நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஃபுளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் நேற்று (நவ15) பேசிய ட்ரம்ப், ‘ரஷ்யா மற்றும் உக்ரைனில் நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கப் போகிறோம். அது நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் துருப்புகள் சண்டையிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் ஆதரவு நிறுத்தப்படுமானால் அது உக்ரைனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையை இது உருவாக்கும் என்பதால், ஜெலன்ஸ்கி அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.