எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு… ஆரம்ப அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/ll-1.jpg)
இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்க செய்து, முதுகுவலி, மூட்டு வலி, உடல் வலி, ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பல தீவிரமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் – டி குறைபாடு
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து வகையான வைட்டமின்களும் தேவை. வைட்டமின்கள் பி – 12, பி – 6, சி மற்றும் டி ஆகியவையும் இதில் அடங்கும். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன் பற்றாக்குறை இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இந்த வைட்டமின் செல் வளர்ச்சி மற்றும் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு போன்ற உடலின் பல செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் குறைபாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் கூறும் ஆலோசனைகளை (Health Tips) தெரிந்துகொள்வோம்.
நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
மருத்துவர் தன்வி மயூர் படேல் வைட்டமின் டி குறைபாடு குறித்து கூறுகையில், ‘வைட்டமின் டி’ குறைபாடு நீரிழிவு நோயாளிகளிடமும் காணப்படுகிறது. தைராய்டு நோயிலும் வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு உள்ளது. இந்த வைட்டமின் பல நோய்களுக்கும் காரணமாகிறது. உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள்
1. சூரிய ஒளிக்கு குறைவான வெளிப்பாடு.
2. உணவில் போதுமான வைட்டமின் டி நிறைந்த உணவுகள் இல்லாத நிலை.
.
3. வயோதிகம் காரணமாக வைட்டமின் குறைபாடு ஏற்படலாம்.
4. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதும் உடலில் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
5. கர்ப்பிணிப் பெண்களும் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
வைட்டமின் டி குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்
எலும்புகளில் வலி மற்றும் பலவீனம்.
தசைகளில் பலவீனம் அல்லது வலி.
அதீத் சோர்வு மற்றும் மந்த நிலை.
அடிக்கடி எலும்பு முறிவுகள்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி.
மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள். ஏனெனில், வைட்டமின் டி குறைபாடு மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க செய்ய வேண்டியவை
தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் செலவிட வேண்டும். தினமும் 10 – 20 நிமிடங்கள், குறிப்பாக காலை அல்லது மாலை சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
உங்கள் உணவில் பால் பொருட்களை அதிகம் சேர்க்கவும்.
ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த மீன்களை உண்ண வேண்டும்.
முட்டை சாப்பிடலாம்.
உடலில் கடுமையான வைட்டமின் குறைபாடு இருந்தால், மருத்துவரை உடனே அணுக வேண்டும்.