விஜய் வைத்த குற்றச்சாட்டு – பதிலடி கொடுத்த நிறுவனம்
சிலருக்கு ஆதாயம் இருப்பதால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றஞ்சாட்டிய நிலையில், பரந்தூரில் தங்களுக்கு நிலம் எதுவும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்த நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அவர்கள் முன் பேசுகையில்,
“டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை
ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.” என்று விஜய் குற்றம்சாட்டினார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு சிலருக்கு ஆதாயம் இருப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சமூக வலைதளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதில் பரந்தூரில் தங்கள் நிறுவனத்துக்கு அதிகளவில் நிலம் இருப்பது போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், தங்களுக்கு பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த நிலமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது நிறுவனத்துக்கு அரசியல் தொடர்புகள் எதுவும் இல்லை எனவும், பொய்யான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.