விஜய் அரசியல் பாதைக்கு வித்திடுகின்றாரா? வெளியான செய்திகள்
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்தார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார்.
படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாரிசு படம் கலவையான விமர்சனத்தின் காரணமாகவும், பீஸ்ட் சந்தித்த மோசமான தோல்வியின் காரணமாகவும் லியோ படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் முனைப்போடு இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் வெளியிட்டிருக்கும் கருத்தால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
விஜய் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சேவைகள் பல செய்துகொண்டிருக்கிறார்.
இதனால் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி தெரிவதாக பலர் கூறினர். . ஆனால் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் விஜய். ஆனால் இது வருங்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான அடிக்கல் என சிலர் கூறுகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கவும் விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி மாவட்டச் செயலாளர் ஆனந்த் ”பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவரை ஒவ்வொரு தொகுதி வாரியாக கணக்கெடுத்து சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சென்று பரிசு சான்றிதழ்கள் வழங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
அது மட்டுமன்றி விவசாய பயன்பாட்டிற்கு உரிய கருவிகள் வழங்குதல் , இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துதல் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
விஜய் நிச்சயம் அரசியல் பாதையில் கால் பதிக்கப்போகிறார் என ஆரூடங்கள் கூறுகின்றன.