14 வருடங்களுக்குப் பிறகு விஜய்… ரசிகர்களின் படையால் ஸ்தம்பித்துப் போன திருவானந்தபுரம்
கேரளாவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தமிழ்நாட்டை தாண்டி விஜய் படங்கள் அதிகளவில் வசூல் சாதனை புரிவதும் கேரளாவில் தான்.
அங்கு விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதற்கு போட்டியாக தங்களது படத்தை வெளியிட அங்குள்ள முன்னணி நடிகர்களே தயங்குவார்கள். அந்த அளவுக்கு கேரளாவில் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகர் விஜய் கடைசியாக காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 2010-ம் ஆண்டு கேரளா சென்றிருந்தார். அதன்பின்னர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் நேற்று கேரளா கிளம்பிச் சென்றார்.
அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்க அலைகடலென திரண்டு வந்ததால், திருவானந்தபுரம் விமான நிலையம் முழுவதும் தளபதி ரசிகர் படையால் நிரம்பி வழிந்தது.
நேற்று மாலை தனி விமான மூலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய விஜய், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து காரில் ஏறி நின்று அவர்களின் அன்புக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
பின்னர் அவர் ஓட்டலுக்கு செல்லும் வழிநெடுக தளபதி ரசிகர்கள் சூழ்ந்ததால் திருவனந்தபுரமே ஸ்தம்பித்து போனது. பின்னர் ஒருவழியாக காவல்துறையினர் கூட்டத்தை அப்புறப்படுத்தி விஜய்யை அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும் விஜய்யின் காரை விரட்டி சென்ற ரசிகர்கள் அவரை பைக்கில் சென்றபடியே வீடியோ எடுத்து வந்தனர். ரசிகர்களின் இந்த செயலை கவனித்த விஜய், காரில் இருந்தபடியே, ரோட்டை பார்த்து பைக்கை ஓட்டு நண்பா என்று செய்கையால் அன்புக்கட்டளையிட்டார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் தான் கோட் படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.