உத்தராகண்ட்: மேகவெடிப்பால் உருவான வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி – 50 பேர் மாயம்

மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் காரணமாக, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
உத்தராசி மாவட்டத்தில் திடீர்வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் மேலும் வெள்ளத்தில் சிக்கியதாக நம்பப்படும் 50க்கும் மேற்பட்டோரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக மாநில நிர்வாகம் கூறியுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர்.
நிலச்சரிவு காரணமாக சில மாநிலங்களில் முக்கியச் சாலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்குள் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமானது, உத்தரகாசியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளைச் சூழ்ந்துகொண்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.
காட்டாற்று வெள்ளத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.