வெனிசுலாவை விட்டு உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை
வெனிசுலாவில் நிலவும் மிக மோசமான பாதுகாப்புச் சூழல் காரணமாக, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜனவரி 10-ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், சர்வதேச விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் பிரதான வீதிகளில் ‘கோலெக்டிவோஸ்’ (colectivos) எனப்படும் ஆயுதமேந்திய குழுக்கள் வீதித்தடைகளை ஏற்படுத்தி, அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் அமெரிக்க ஆதரவாளர்களைத் தேடி வருவதாகத் தூதரகம் எச்சரித்துள்ளது.
கடத்தல், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதை போன்ற அபாயங்கள் இருப்பதால், வெனிசுலாவை ‘நிலை 4’ (Level 4: Do Not Travel) என்ற மிக உயர்ந்த ஆபத்துள்ள நாடாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.
2019 முதல் அங்குத் தூதரகச் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், எவ்வித அவசர கால உதவிகளையும் வழங்க முடியாது என அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.





