அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 : அக்டோபர் 1ல் துணை அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம்
அமெரிக்கத் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர்கள் இருவரும் அக்டோபர் 1ஆம் திகதி நேரடி விவாதத்தில் பங்கேற்கவிருக்கின்றனர்.ஆண்மையின் அடையாளங்கள் குறித்து இருவரும் மாறுபட்ட சிந்தனையாளர்கள் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டுகின்றனர்.
குடியரசுக் கட்சி சார்பாக ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்சும் ஜனநாயகக் கட்சி சார்பாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்சும் துணை அதிபர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். வான்ஸ், குடும்பம் என்பதன் தொடர்பில் பழைமைவாதக் கருத்து கொண்டிருப்பவர்.
மகப்பேறு இல்லாத பெண்களுக்கும் நாட்டு நலனுக்கும் தொடர்பில்லை என்று விமர்சிப்பவர். முன்னாள் படைவீரரான அவர் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அத்தகையோருக்கான குரலாக விளங்குவேன் என்கிறார் வான்ஸ்.கருத்தடையை எதிர்க்கும் அவர், சட்டையை மாற்றுவதுபோல் வாழ்க்கைத்துணையை மாற்றக்கூடாது என்று கூறி, ‘குடும்பம்’ என்பதற்கான புதிய வரைமுறைகளை ஏற்க மறுக்கிறார்.
மறுபக்கம், ஜனநாயகக் கட்சியின் வால்ஸ், நல்ல குடும்பம் என்பதற்கான மாறுபட்ட வரையறையை நிறுவ முனைந்துள்ளார்.பள்ளி ஆசிரியராக இருந்தபோதே LGBTQ எனப்படும் ஒத்த பாலீர்ப்புடைய ஆண், பெண், இருபாலீர்ப்புடையோர், திருநர், பன்முகப் பாலீர்ப்புடையோரைக் கொண்ட மாணவர் மன்றத்தைத் தாம் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளியில் உருவாக்க உதவியவர் இவர். சமூகத்தில் இத்தகையோரின் உரிமைகள் பரவலாக ஏற்கப்படுமுன்பே திரு வால்ஸ் அவர்களுக்காகப் பணியாற்றியுள்ளார்.
குடியரசுக் கட்சியினரின் ஆணாதிக்க மனப்போக்குக்கு மாற்றுத் தெரிவுகளை ஜனநாயகக் கட்சி முன்னிறுத்துவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். வால்ஸ் மட்டுமன்றி கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹாஃபும் மனைவிக்கு ஆதரவாக நடந்துகொள்பவர் என்பதை அவர்கள் சுட்டினர்.