காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சங்களை உள்ளடக்கிய இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பிடம் பணய கைதிகளாக இருந்த அனைவரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தின் ஷர்ம்எல்-ஷேக் (Sharm El-Sheikh) நகரில் கையெழுத்திடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி (Abdel Fattah el-Sisi) தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்துகொள்ள ட்ரம்ப் எகிப்திற்கு நேரில் சென்றார்.
நிகழ்வில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres), உட்பட 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.