புட்டினுடன் சந்திப்பு! அமெரிக்கா – இந்தியா வரி விவகாரத்தில் திடீரென முடிவை மாற்றிய டிரம்ப்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டுள்ளார்..
இந்த சந்திப்பைத் தொடர்ந்து விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷ்யாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம்,” என்று தெரிவித்தார்.
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், “இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ரஷ்யா உக்ரைனுடன் போரை தொடரும் நிதியைப் பெற்று வருகிறது” என்றார்.
இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது. மேலும் வரி விதிப்பு வரும் 27ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த வரியை நியாயமற்றது எனக் கண்டித்துள்ளது.
சந்திப்பின் முடிவில் மீண்டும் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த டிரம்ப், “இரண்டு அல்லது மூன்று வாரங்களில் யோசிப்பேன்,” என்றார்.