ஈரான் நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதித்த அமெரிக்கா

ஈரான் நிறுவனங்களுக்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதிய தடைகளை விதித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெற்றோலியம் மற்றும் இரசாயனங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான் நிறுவனங்களுக்கே இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 50 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களை இலக்கு வைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பல மில்லியன் டொலர் பெறுமதியான எரிவாயு உள்ளிட்ட பெற்றோலிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஈரானிய ஏற்றுமதிகள் இலங்கை மற்றும் பங்களாதேஷை சென்றடைந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த தடை விதிப்பானது, ஈரானின் நிறுவனங்கள் மற்றும் கப்பல் வலையமைப்பை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானுக்கு பில்லியன் கணக்கான வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியின் முக்கிய கூறுகளை இந்த செயற்பாடு சிதைக்கும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது